0
ஆச்சர்யங்கள் நிறைந்த கபாலி டிராக் லிஸ்ட்
ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் ஆடியோ வருகிற ஜுன் 12-ந் தேதி வெளியாகவிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களின் டிராக் லிஸ்ட் நேற்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.
அந்த டிராக் லிஸ்டில் பல்வேறு ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளன. அதாவது, பொதுவாக ரஜினி படம் என்றால் பிரபல பாடகர்கள் மற்றும் பிரபல கவிஞர்களின் பெயர்கள் இடம்பெறும். ஆனால், இந்த படத்தில் அவை எல்லாம் தகர்த்தெறியப்பட்டுள்ளன. இளம் கவிஞர்கள், இளம் பாடகர்கள் ஆகியோர் இணைந்து இந்த படத்தின் டிராக் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளனர்.
ரஜினி படத்துக்கு முதன்முதலாக இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். உலகம் ஒருவனுக்கு … என்று கபிலன் எழுதியுள்ள பாடலை சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து அனந்து, கானா பாலா ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலின் இடையே வரும் தமிழ் ராப் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.
மாய நதி.. என்று தொடங்கும் பாடலை உமா தேவி எழுதியுள்ளார். அனந்து, பிரதீப் குமார், ஸ்வேதா மேனன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். வீரா துறந்தாரா… பாடலை உமா தேவி எழுத, கானா பாலா, லாரன்ஸ், பிரதீப் குமார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். வானம் பார்த்தேன்… என்ற பாடலை கபிலன் எழுத, பிரதீப் குமார் பாடியுள்ளார். ‘கபாலி’ டீசரில் இடம்பெற்ற ‘நெருப்புடா…’ என்ற பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி பாடியிருக்கிறார். நடுவில் இடம்பெறும் வசனங்களை ரஜினிகாந்த் எழுதியிருக்கிறார்.
‘கபாலி’ படத்தின் பாடல்களை பிரம்மாண்டமாக விழா எடுத்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், ஒருசில காரணங்களால் இந்த விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, வருகிற ஜூன் 12-ந் தேதி ‘கபாலி’ படத்தின் பாடல்களை அனைவரும் இணையதளத்தில் நேரடியாக கேட்டு ரசிக்கலாம்.

Post a Comment

 
Top